திருவனந்தபுரம்: கேரளத்தின் பாரம்பரிய பண்டிகையான, ஓணம் பண்டிகை ஒரு வார காலம் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்த உள்ளது.
வயநாடு சோகம் காரணமாக, இந்த ஆண்டு கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் விழா ரத்து செய்யப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். ஆனால் வழக்கமான ஓணம் விடுமுறைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் மலைப்பகுதி மாவட்டமான வயநாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. , எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரிவில், மிகப்பெரிய உயிர்சேதம் ஏற்பட்டது. 400க்கும் மேற்பட்டோர் உயிரிழிக்க நேரிட்டது. அதற்கான மீட்புப்பணிகளும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், அதிகப்படியான உயிர்சேதம், இயல்பு நிலை பாதிப்பு ஆகிய காரணங்களால், கேரள மாநிலத்தில் சுமார் ஒரு வார காலம் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளத்தின் “அறுவடைத் திருநாள்” என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் திருவோணத்திற்கு ஒரு நாள் முன்பு தொடங்கி திருவோணம் முடிந்து 2 நாட்கள் முடிவடையும் இந்த பண்டிகைக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்படுவது உண்டு. இந்த நான்கு நாட்களும் முதல் ஓணம், இரண்டாம் ஓணம், மூன்றாம் ஓணம், நான்காவது ஓணம் என்று அழைக்கப்படுகின்றன. இரண்டாவது ஓணம் முக்கிய திருவோண நாள். மேலும் ஓணம் விழாவின்போது பாரம்பரியமான படகு போட்டி, பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அரசு ஓணம் பண்டிகையை ரத்து செய்துள்ளதால், அதுபோன்ற விழாக் கள் நடைபெறாது என கூறப்படுகிறது. இதனால், ஏராளமான பாரம்பரிய கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு வயநாடு சோகம், காரணமாக வழக்கமான கொண்டாட்டம் இல்லாத வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.