ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் முதலமைச்சராக உமர் அப்துல்லா தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மேலும், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா விரைவில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். . அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை விடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஒமர் அப்துல்லா தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த தீர்மானத்துடன் டெல்லி சென்று அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் தேசிய மாநாட்டு கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதலமைச்சராக ஒமர் அப்துல்லா கடந்த 16ஆம் தேதி பதவி ஏற்றார். அவருடன் துணைமுதல்வர் உள்பட 5 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றது.
இந்த நிலையில் ஶ்ரீநகரில் உள்ள ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 307 ஆவது சட்டப்பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேச மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெறப்படும் என்று தேசிய மாநாடு கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அதற்கு முக்கியத்துவம் தரும் வகையில் இப்போது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. தீர்மான நகலுடன் அடுத்த சில நாட்களில் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தீர்மான நகலை வழங்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று ஏற்கனவே கூறி வந்த நிலையில் ஒமர் அப்துல்லா பிரதமரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதனிடையே கல்வியாளர் ஜாஹூர் அகமது, குர்ஷித் மாலிக் ஆகியோர் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அரசு அந்தஸ்து வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.