டில்லி:

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி முதல்வர் நாராயணசாமி தலைமையில்  அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் டில்லியில் நடைபெற்றது. அத்துடன் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக இருந்து வருவதால், மத்திய அரசின் உள்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன் காரணமாக யூனியன் பிரதேசங்களில் கவர்னர்களின் அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது. புதுவை கவர்னர் கிரண்பேடி அரசின் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைத்து மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.  தனக்குத்தான் கூடுதல் அதிகாரம் இருப்பதாக கூறி நிர்வாக வி‌ஷயங்களில் தலையிட்டு வருகிறார்.

புதுவைக்கு தனி மாநில அந்தஸ்துகோரி டில்லியில் ஆர்ப்பாட்டம்

இதை தடுக்கும் விதமாக புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக புதுச்சேரி மக்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மத்தியஅரசு அதுகுறித்து அக்கறை காட்டாமல் புறக்கணித்து வருகிறது.

இந்த நிலையில், புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் டில்லியில்  காங்கிரஸ் தலைமையில்  இன்று ஆர்ப்பாட்டம் நடை பற்றது.

டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அவருடன் புதுவை மாநில அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கலக்கண்ணன், தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் கட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

அவர்களுடன் புதுச்சேரி  சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தனபால், விஜயவேணி ஆகியோரும் பங்கேற்றனர்.

புதுவைக்கு தனிமாநில அந்தஸ்துகோரி டில்லியில் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பாக  தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ராஜா மற்றும் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையையும், கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆங்கிலத்தில் பதாகைகள் வைத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, இதுகுறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.