அமராவதி: கோதாவரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
நாட்டின் பல மாநிலங்களிலும் பரவலாக மழை கொட்டி வருகிறது. அதன் காரணமாக முக்கிய நதிகளில் நீர்வரத்து உயருகிறது. அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
குறிப்பாக ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந் நிலையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்தில் மழை, வெள்ள நிலைமைகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்பது பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: ஆந்திராவில் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிகாரிகள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகள் துரிதமாக நடக்க வேண்டும்.
தற்போது கிருஷ்ணா மாவட்டத்திலும் வெள்ள பாதிப்புகள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும். இது தொடர்பான அறிக்கைளை தவறாது அனுப்ப வேண்டும். நிவாரண முகாம்கள் அமைத்து மக்களை தாழ்வான இடங்களில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.