அகர்தலா:
திரிபுரா சட்டமன்ற தோல்வியை தொடர்ந்து முதல்வர் பதவியை மாணிக் சர்க்கார் ராஜினாமா செய்தார். புதிய அரசு பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராக இருந்து வருகிறார். எளிமையானவர், ஊழல் அற்றவர் என பெயர் பெற்ற மாணிக் சர்க்கார் பதவியை ராஜினமா செய்ததைத் தொடர்ந்து உடனடியாக அரசு வீட்டை காலி செய்தார்.
நாட்டிலேயே சொந்த வீடு இல்லாத, மிகவும் எளிமையான முதல்வராக மாணிக் சர்க்கார் இருந்து வந்தார். அவருக்கு குடியிருக்க வீடு இல்லாததால் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது மனைவியுடன் குடியேறியுள்ளார். கட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் உள்ள அறையில் அவரும், அவரது மனைவி பாஞ்சாலி சர்க்காரும் குடியேறியுள்ளனர். சாதாரண 2 அறைகள் கொண்ட குடியிருப்பில் தங்கி வழக்கம்போல் தங்கள் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
1998ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை திரிபரா முதல்வராக மாணிக் சர்க்கார் இருந்துள்ளார். 2013ம் ஆண்டு வேட்பு மனு தாக்கலில் ரூ.9,730 வங்கி இருப்பு என்று குறிப்பிட்டிருந்தார். முதல்வர் பதவிக்கான சம்பளத்தை கட்சிக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டு, கட்சி கொடுக்கும் ரூ.5 ஆயிரம் உதவித் தொகையை மட்டுமே பெற்று வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரூ.2,410 மட்டுமே இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். வருமான வரி கணக்கை இவர் தாக்கல் செய்ததே கிடையாது. அதற்கான உச்சவரம் வருமானத்தை அவர் எட்டியது கிடையாது. இ.மெயில், சமூக வலை தள கணக்கு, செல்போன் கிடையாது.
மாணிக் சர்க்காரின் மனைவி பஞ்சாலி மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அகர்தலாவில் அவருக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்ட சில மாதங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்தார். ஆனால் வீடு கட்டுமான பணிகள் இன்னமும் நிறைவு பெறவில்லை.