நாமக்கல்:

சேலம் மாவட்டம் நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில், இன்று நடைபெற்ற விழாவில்  மத்தியஅமைச்சர் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் புதியதாக 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து, கல்லூரிகளை தொடங்குவதற்கான பணிகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது.  ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டிய எடப்பாடி இன்று, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.338.76 கோடி மதிப்பீட்டில்  புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் மற்றும் தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர். சரோஜா, டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி. பாஸ்கர், சந்திரசேகரன், பொன். சரஸ்வதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் 1650 மருத்துவ இடங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும். இதில் தமி்ழக மாணவர்க ளுக்கு 85 சதவீத இடங்கள் கிடைக்கும் என்று கூறினார். மேலும்,  தமிழகத்தை தண்ணீர் பிரச்சினை இல்லாத மாநிலமாக உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிக அளவு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. அம்மா ஆட்சியில் இருந்தபோது, 6 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார். அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தும் நாம் இப்போது புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்திருக்கிறோம். 11 புதிய மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கிய பிரதமர் மோடிக்கு, மத்திய சுகாதார அமைச்சருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வளவு பெரிய சாதனையை நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சியினர் இந்த அரசு என்ன செய்தது என்று கேட்கிறார்கள். மருத்துவ கல்லூரி துவங்குவதன் மூலம் வெளி மாநிலத்தவர்கள் தான் இங்கு படிக்கப் போகிறார்கள் என்று எதிர்க்கட்சி கூறி வருகிறார்கள்.

100 சதவீத இடத்தில் 15 சதவீதம் தான் அகில இந்திய அளவில் தேர்வு பெற்று மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான் சேர்ந்து படிப்பார்கள். அகில இந்திய அளவில் ஒதுக்கப்பட்டுள்ள 15 சதவீத இடத்திலும் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்று சேரும் வாய்ப்பு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டேன். அதில் பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ரூ.1167.21 கோடி மதிப்பீட்டில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.34.36 கோடி திப்பீட்டில் கட்டப்பட்ட 9 புதிய அரசுக் கட்டிடங்களை திறந்து வைத்து 33,141 பயனாளிகளுக்கு ரூ.134.37 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள்

1. மல்லசமுத்திரம் மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு உட்பட்ட 712 குக்கிராமங்களைச் சேர்ந்த 2 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில், ஒரு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

2. பள்ளிபாளையம் காவேரி ஆற்றின் குறுக்கே 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் தற்போது உள்ள பழைய பாலத்திற்கு மாற்றாக, 45 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய உயர்மட்டப் பாலம் கட்டப்படும்.

3. குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சிகள் மற்றும் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி, பள்ளிபாளையத்தினை தலைமையிடமாகக் கொண்டு புதிய காவல் உட்கோட்டம் அமைக்கப்படும்.

4. நாமக்கல்லில், புதிய ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகக் கட்டடம் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

5. நாமக்கல் நகராட்சி, கொசவம்பட்டி ஏரியை தூய்மைப்படுத்தி, பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

6. தேர்வுநிலை நகராட்சியாக உள்ள நாமக்கல் நகராட்சி, சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

7. தற்போது மிகவும் பழைய கட்டடத்தில் இயங்கிவரும் பரமத்தி மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.

8. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அருகில் மரபியல் மற்றும் பல்லுயிர் பூங்கா உருவாக்கப்படும்.

9. திருச்செங்கோடு குமாரபாளையம் சாலையில் காவேரி ஆர்.எஸ். மற்றும் ஆனங்கூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்வே உயர்மட்டப் பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாமக்கல் – திருச்சி 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு பரிசீலினையில் உள்ளது.

அதேபோல சமூகநலத் துறை அமைச்சர் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றார். இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தினாலே அந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சனை இருக்கின்றது. குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதுவும் அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.