சேலம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறந்துவிட்டதாக சமூக வலைதளமான ‘வாட்ஸ்-அப்பில்‘ வீடியோ செய்தி ஒன்று வைரலாக பரவி வந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து வந்த போலீசார், அந்த வீடியோ செய்தியை பதிவிட்ட சேலத்தை சேர்ந்த இளைஞரை நேற்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்-அப்பில்‘ அவதூறாக தகவல் பரவியது. எடப்பாடி இறந்துவிட்டதாக தொலைக்காட்சியில் வெளியிடுவது போன்று கிராபிக்ஸ் செய்யப்பட்டு, “எடப்பாடி பழனிசாமி இறந்தது போன்று கண்ணீர் அஞ்சலி” போஸ்டருடன் “தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையை கண்டித்து தனது உயிரை மாய்த்து கொண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று இருந்தது.
இந்த தகவல் வாட்ஸ்அப் மூலம் வைரலாக பரவியது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், இந்த அவதூறு தகவலை பரப்பியவர் தம்மம்பட்டியைச் சேர்ந்த நடேசன் மகன் விஜயகுமார் (28) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.