சென்னை,
முதல்வர் உடல்நிலை குறித்து, அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமான தகவல், டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அம் மருத்துவனையின் நிர்வாகி பிரதாப் ரெட்டியின் மகளும் மருத்துவனை பொறுப்பாளருமான சங்கீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சிறப்பு வார்டில் இருந்து மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்துடிப்பை சீராக்கும் நவீன மருத்துவக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவர்களுக்கும் அவசர அழைப்பு விடப்பட்டு அவர்களும் சென்னை வந்துவிட்டார்கள்.
சென்னை அப்பல்லோ மருத்துவக்குழுவினர் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்கள். அவருடன் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்பாக ஆலோசனை செய்து அவர் வழங்கிய ஆலோசனையின்படியும் சிகிச்சைகள் தொடர்கின்றன.
இதற்கிடையே நேற்று இரவு 11 மணிக்கு அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “முதல்வரின் இதயத்துடிப்பை சீராக்கும் முயற்சியாக அவருக்கு extracorporeal membrane heart assist device மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டது.
இந்த முறை சிகிச்சை என்பது மாரடைப்பு ஏற்பட்டு இதயத்துக்கு ரத்தம் செல்வது தடைபடும் நிலையில், உடலுக்கு வெளியே எக்ஸ்ட்ரா கார்போரியல் என்னும் எந்திரத்தை இதயத்தோடு பொருத்தி இதயத்துடிப்பை சீராக்க முயல்வதாகும்.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டியின் மகள் சங்கீதா ரெட்டி நேற்று இரவு 10.47 மணிக்கு செய்துள்ள ட்விட்டில்
“முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிசிச்சையளித்து வருகிறார்கள். கடவுளின் ஆசி அவருக்கு கிடைக்கட்டும்” என்று தெரிவித்தார்.
தற்போது சங்கீதா ரெட்டி, “முதல்வருக்கு சிகிச்சை தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.