.
ஐக்கிய அரேப் எமிரேட்ஸில் இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது.
உண்மையில், அதிக மழை பெய்ய வைக்கப்பட்டுள்ளது. ஆம். அறிவியல் முறைப்படி, செயற்கையாய் மழை பெய்ய வைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
வளிமண்டலவியல் நிலநடுக்கவியல் தேசிய மையத்தை (NCMS) சேர்ந்த
வானியல் மற்றும் மேக விதைப்பு நிபுணரான டாக்டர் அகமது ஹபீப், இதுவரை ஐக்கிய அரேப் எமிரேட்ஸில், 2017 ஜனவரி முதல் தற்போது வரை 56 முறை மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஹபீப் ஞாயிறன்று காலிஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “கடந்த வியாழன் துவங்கி மூன்று நாட்களில் மட்டும் 10 முறை மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

“இந்த நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள மேகங்கள் செயற்கை மழை பெய்ய செய்துள்ளோம். இதனால் பெருமளவில் மழை அளவு அதிகரித்துள்ளது.”
மேக விதைப்பு நடவடிக்கைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-யில் மழை அதிகரிக்க ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளது” என்றார்.

சர்வதேச ஆய்வு முடிவுகளின்படி எமிரேட்டில் மழையளவு கடந்த சில ஆண்டுகளில் சதவீதம் 10-30 % அதிகரித்துள்ளது என்றும் ஹபீப் குறிப்பிட்டார்.
” மழை அதிக அளவு அது சாதாரண சூழ்நிலையில் இருந்த காலத்தைவிட ஐக்கிய அரபு எமிரேட் மழை விரிவாக்கம் திட்டம் மூலம் செயல்படுத்தப் பட்ட – மேக விதைப்பு மூலம் பெறப்படுகின்ற மழை அளவு பெருமளவில் அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

தங்கள் நடவடிக்கைகளின் போது, மழை உருவாக்கவல்ல மேகங்களில் மட்டுமே ரசாயனங்கள் தூவப்பட்டன என்றார்.
இந்தியாவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மராட்டிய மாநிலத்தில் வறட்சியாக உள்ள பகுதிகளில், சீன அரசின் உதவியுடன் செயற்கை முறையில் மழை பெய்ய வைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்தது.

மேக விதைப்பு முறை குறித்தான விளக்கம்:
சில இடங்களில் அதீத மழையும் வேறு சில இடங்களில் அதீத வறட்சியும் ஏற்படுவதால் மனித உயிர் இழப்புக்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. மழை பெய்யப் போவதை துல்லியமாக யாரும் கணித்துக் கூற இயலாது. இயற்கையாக எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் என்பதை, ‘‘மழைப்பேறும் பிள்ளைப் பேறும் மகாதேவனுக்குக்கூடத் தெரியாது’’ என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

‘‘‘‘எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை “ ‘‘ஆடியில் காத்தடிச்சா (காற்றடித்தால்) ஐப்பசியில் மழை வரும்’’ ‘‘கர்ணனுக்கு மேலே கொடையும் இல்லை கார்த்திகைக்கு மேல் மழையுமில்லை’’ மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு, வான்சிறப்பு எனும் அதிகாரத்தை மழைக்காக ஒதுக்கியுள்ளார்.

மழையின்றி உலகில் ஒரு உயிரினமும் வாழ முடியாது. மழை பொய்த்தால் வறட்சி மற்றும் பஞ்சம் ஏற்படும். எனவே தான் இயற்கையை, மழையை தெய்வமாக வழிப்பட்டனர் நமது முன்னோர்.

எனவே, மழை வேண்டி மக்கள் பல பிரார்த்தனைகளைச் செய்வர். மூடபழக்கங்கள் சமூகத்தில் நுழைந்த பின்னர், சிலர் விநோத முறையில் கழுதை திருமணம் செய்து மழை வராத எனக் காத்து கிடக்கின்றனர். இந்தப் பழக்கம் பழங்காலம் முதல், அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள தற்பொது வரை நடந்து வருகின்றது.
பழங்காலத்தில் சீனாவில் மழை வேண்டி யாகம் செய்யப்பட்டது. விரிவான சடங்குகள் செய்யப்பட்டு ஒரு அழகான கன்னிப்பெண்ணை தண்ணீர் டிராகனுக்காகப் பலி கொடுத்தார்களாம். தற்போது சீனா செயற்கை மழையில் முன்னனியில் உள்ளது.

இயற்கை மழை vs. செயற்கை மழை:

சூரிய வெப்பத்தினால் நிலத்தில் உள்ள நீர் ஆவியாகி, நீராவி மேலெழும்பி மேகமாக மாறுகிறது வளிமண்டலத்தில் உயரே செல்லச் செல்ல, காற்றின் அழுத்தம் குறைகிறது. இதனால் மேகம் மேலே செல்லச் செல்ல விரிவடைவதுடன், அதனுடைய வெப்பநிலையும் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், காற்றினால் அடித்துச் செல்லப்படும் சிறு தூசுகள் ஒரு கவர்ச்சி மையமாகச் செயல்பட்டு பல நீர் திவலைகளை ஒன்றினைத்து மழையை பொழிவிக்கிறது.

செயற்கை மழை என்பது ஓரிடத்தில் பொழிய வேண்டிய மழை மேகத்தை வேறொரு பகுதியில் செயற்கையாகப் பெய்ய வைக்கும் முயற்சி ஆகும். உப்பு, சில்வர் அயோடைடு போன்ற ஐஸ் உருவாக்கும் பொருட்களை ஆகாயத்தில் தெளிக்கின்றனர். இதனால் உருவாகும் மேகங்கள் மழையைப் பொழிகின்றன. இயற்கை மழையையும், செயற்கை மழையையும் வித்தியாசப்படுத்த முடியாது. ஆனால் செயற்கை மழையில் விழும் மழைத் துளி, பெரியதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

செயற்கை மழை என்பது செயற்கையாக மேகத்தை உருவாக்கி மழை பெய்ய செய்வதல்ல. வளிமண்டலத்தில் இருக்கின்ற மேகங்கள், நாம் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கின்ற இடத்திற்கு நேர் மேலே வரும்போது வேதிப்பொருட்களைத் தூவி மழை மேகங்களாக்கி மழை பெய்ய செய்வதாகும். இதைத் தான் cloud seeding அதாவது மேக விதைப்பு முறை என்று அழைக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு தான் செயற்கை மழையை உருவாக்கி வருகிறார்கள்.

உலகளவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முக்கியமான செயற்கை மழை திட்டங்களில் சில:

மெக்சிகன் சோதனை: 1996- 1998;
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சோதனை: 2001-2004;
இத்தாலி சோதனை: 2004-2005;
இந்தோனேசிய சோதனை: 2005;
வயோமிங் சோதனை: 2005-2010;
தென்கிழக்கு குயின்ஸ்லாந்து மேக விதைப்பு சோதனை: 2008-2010.

இந்தியாவில் செயற்கை மழை ஆராய்ச்சி:

1947ல் வோனிகட் வெற்றிகரமாகச் செயற்கை மழையை சோதித்து காட்டியதில் இருந்தே ஆராய்ச்சிகள் துவங்கின. 1952ல் கல்கத்தாவில் “மேக விதைப்பு சோதனை செய்யப்பட்டது. இதில், சில்வர் அயோடைட் மற்றும் உப்பு ஒரு ஹைட் ரஜன் பலூலின் நிரப்பப்பட்டு வானில் பறக்க விடப்பட்டன.

1951 ல் டாட்டா ஆராய்ச்சி நிறுவனமும் இந்தச் சோதனையை நடத்தியது.
1957-1966ல் சென்னை ஐ.ஐ.டியில் உள்ள மழை மற்றும் மேகம் ஆராய்ச்சி நிறுவனம் வட இந்தியாவில் நடத்திய ஆய்வில், 20% வரை மழை அதிகரிக்கப்பட்டது.
சென்னை திருவள்ளூர் பகுதியில் 1973, 1975-1977ல் நடத்தப்பட்ட ஆய்வில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முறையே 32 % அதிகரிக்கவும், 17% குறையவும் செய்தது.

சென்னை பூனேவிலும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

செயற்கை மழை எப்படி பெய்கிறது?

செயற்கை மழை பெய்விப்பை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்….
• முதலில், வானில் நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை மழை தேவைப்படும் இடத்திற்கு ஒன்றுகூட்ட வேண்டும். அதற்கு அந்தப் பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும். கல்சியம் கார்பைட், கல்சியம் ஒக்ஸைட், உப்பும் யூரியாவும் சேர்ந்த கலவை/ அமோனியம் நைட்ரேட் கலவையை விமானங்கள்மூலம் அந்தப் பகுதியில் இருக்கும் மேகங்களின் மேல் தூவி அப்பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் ஈரத்தன்மையை அதிகரித்து மழை மேகங்கள் உருவாக்குவார்கள்.

• அடுத்து, மழை மேகங்களின் கணத்தை அதிகரிக்க சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி மேலும் அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்றுகூடட்டுவார்கள். (கல்சியம் குளோரைட்டும் பயன்படுத்துவதுண்டு.) இது விமானம்மூலம் அல்லது பீரங்கிகள்மூலம் மேற்கொள்ளப்படும்.

• இறுதியாக, வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுவதன் மூலம் மேகங்கள் குளிச்சியாக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களிலிருந்து நீர்த்துளி வெளியேறி மழை பெய்கிறது!

செயற்கை மழையினால் பாதிப்பு உண்டா?
செயற்கை மழையினால் உடலிற்கோ/ தாவரங்களுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை! இயற்கை மழையைப்போன்றதாகவே இருக்கும். துளிகளின் அளவும் சில வேளைகளில் பெரியதாக இருக்கலாம்.

ஆனால், ஒரு இடத்தில் வலுக்கட்டாயமாக மேகங்களைக் கூட்டி மழையை பெய்விப்பதால் பல இடங்களில் இயற்கையாகப் பெய்யவேண்டிய மழை பெய்யாது வறட்சி ஏற்படும். கால நிலை மேலும் மோசமடையும்.

செயற்கையாக மழை பெய்விக்க தேவையான அனைத்தையும் செய்தும் சில நேரங்களில் மழை பெய்வதில்லை. சில நேரங்களில் எதிர் பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து அழிவை ஏற்படுத்தும்!
செயற்கை மழை பரிசோதனையில் கனடாவின் கியூபக் நகரில் மூன்று மாதங்களில் சுமார் 60 நாட்கள் மழை பெய்து அழிவை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது!