கோவை:
கோவை அரசு பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட துப்புரவு ஊழியர், செந்தில் என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
திருப்பூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவரின் உடல், பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இவரது உடலை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களின்டம் ஒப்படைக்க மருத்துவமனை ஊழியர் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு உடலைச் சுற்றும் காடா துணி, பஞ்சு போன்றவைகளை யாரும் கொடுப்பது இல்லை என்றும் அதனை வாங்குவதற்கு தான் இந்த பணம் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையெல்லாம் புதிய தலைமுறை தொலைக்காட்சி, மறைமுகமாக வீடியோ எடுத்து ஒளிபரப்பியது. இதையடுத்து, லஞ்சம் கேட்ட செந்தில் என்ற அந்த துப்புரவு ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அங்கு வரும் அனைவருமே பணம் கொடுத்துதான் உடலை பெறுகின்றனர் என அந்த ஊழியர் கூறியுள்ளார். மேலும், லஞ்சம் கேட்பதை தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவரே பணம் கொடுப்பது வழக்கமான நடைமுறை தான் என்று கூறி லஞ்சம் தர வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.