சென்னை,

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மாற்றுவது குறித்து மத்திய அரசிடம் இருந்த எந்தவித தகவலும் வரவில்லை என்று முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்,

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்து மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாக தவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, சட்டமன்றத்தில்  கவன ஈர்ப்பு கொண்டு வந்தார். அப்போது,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு போதிய நிதி ஒதுக்கி சுயாட்சியாக இயங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கட்டிடம் கட்ட 17 ஏக்கர் நிலப்பரப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மாற்றப்படுவது தொடர்பாக செய்திதாள்கள் மூலமாக தான் இந்த தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ஆட்சிகுழு தலைவர் என்ற அடிப்படையில் எனக்கோ, தமிழக அரசுக்கோ இதுவரை மத்திய அரசிடம் இருந்து வரவில்லை, தகவல் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தியாவில் முதன் முதலாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து 2004-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. தொடர்ந்து சம்ஸ்கிருதம் (2005), தெலுங்கு, கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது.

அந்தந்த மாநிலங்களில் செம்மொழி வளர்ச்சிக்காக செம்மொழி ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கப் பட்டன.  மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் செயல்பட்டன. ஆனாலும்  அவற்றுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டது.

இதனால் செம்மொழி ஆய்வு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மொழி குறித்த ஆராய்ச்சி மற்றும் மொழி  ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் பணிகளில் இந்த ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் தற்போதுள்ள 6 மொழிகளின் செம்மொழி நிறுவனங்களை அவை அமைந்துள்ள மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் யோசனையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம், திருவாரூரில் இயங்கு  மத்திய தமிழ்நாடு பல்கலையுடன்  இணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.