சென்னை: எம்எல்ஏ விடுதியில் உள்ள வேலுமணி அறையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின்  ரெய்டின்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 10அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில்  நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்தது.

சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் தங்கியிருந்த  எஸ்.பி.வேலுமணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த  அதிமுகவினர் சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதி முன்பு குவிந்தனர். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தலைமையில் அங்கு வந்த அதிமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் காவல்துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது.

இந்த நிலையில்,  எம்எல்ஏ விடுதிக்கு முன்னாள் அமைச்சர்கள், சி.வி.சண்முகம் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வந்தனர். அவர்களும், தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் அவர்களை உள்ளே விடவில்லை. நீண்ட நேரமாக வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் பெஞ்சமின் ஆகியோரை மட்டும் எம்எல்ஏ விடுதிக்குள் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் விசாரணை நடைபெறும் அறைக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதிமுகவினரை கலைந்துசெல்லும்படி எச்சரித்தனர். இதையடுத்தே நிலை கட்டுக்குள் வந்தது.

அதுபோல வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனையை கண்டித்து திமுகவினர் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

எம்எல்ஏ விடுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் இருத்தல், நோயைப் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை குனியமுத்தூரில் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், எம்.எஸ்.எம் ஆனந்தன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் 500 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.