சென்னை: மோடி பசும்பொன் வரும் விவகாரம் தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமைலை மற்றும் பாஜக ஐடிவிங் இடையே மோதல் வெடித்துள்ளது, அவர்களின் அறிவிப்பின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரதமர் மோடி  வருகிற அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தருவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர அறிவிப்பும் வரவில்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், அதற்கு நேர் மாறாக, தமிழ்நாடு பாஜக ஐடி விங் மாநிலத் தலைவர் நிர்மல் குமார் கருத்து கூறியுள்ளார். அவரது டிவிட்டில், “மாநில அரசு பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித உறுதிமொழியும் கொடுக்காத காரணத்தினால் இந்த வருடம் பிரதமர் வருவது தள்ளிப்போனதாக தகவல்”  என தெரிவித்து உள்ளார்.

உண்மைக்கு புறம்பான ஒரு செய்தி பதிவேற்றியது மட்டுமல்லாம், மாநில அரசு மற்றும் மாநில காவல்துறைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே விஷயத்தில் மாநில தலைவருக்கும், மாநில ஊடக பிரிவு தலைவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவது இதன்மூலம் அம்பலமாகி உள்ளது.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தனது இருவார அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை வந்தடைந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு  பதில் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் வருகிற தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருவதாக கூறப்படும் தகவல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் தெரிவித்த அண்ணாமலை,  பிரதமர் வருகை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை’ என தெரிவித்தார். தொடர்ந்து இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிட்டார்.

அதில், முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி வருகிறார் என்ற செய்தி எங்கிருந்து தொடங்கியது என்று தெரியவில்லை. அக்டோபர் 30ந்தேதி பிரதமர் தமிழ்நாடு வருவதாக திட்டம் ஏதும் இல்லை. பிரதமரின் நிகழ்ச்சிகள் 2 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்படுபவை. அதனால், பிரதமரை அடுத்த ஆண்டு பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வருமாறு கோரிக்கை வைப்போம். ஆனால், இந்த ஆண்டு அவர் வருவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.