டில்லி

ந்தியச் சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் பல வழக்குகளை எளிதில் தீர்க்க முடியும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்னவென்று சுருக்கமாகச் சொல்லப் போனால்  கணினி உள்ளிட்ட இயந்திரங்களின் பயன்பாட்டைக் கொண்டு ஒரு செய்கையை எளிதாக முடிப்பதாகும்.   இது அனைத்து தானியங்கி இயந்திரங்களுக்கும் பொருந்தும்.   இதனால் பல துறைகளும் தற்போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.   இது மனிதனின் பணிகளை எளிதாக்குவதோடு அவற்றை விரைவில் முடிக்கவும் பயன்படுகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.  அந்த விழாவில் அவர் உரையாற்றுகையில், “தற்போது அனைத்து நீதிமன்றங்களிலும் பல வழக்குகள் வெகு நாட்களாக நிலுவையில் உள்ளன.    இவற்றை  விரைவில் முடித்தாக வேண்டிய நிலை உள்ளது.

எனவே இதற்கான புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்.  இந்த புதிய தொழில்நுட்பத்தினால் நாம் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து நீதிமன்ற செயல்பாடுகளை மேம்படுத்த முடியும்.   இது கைக்கு எட்டிய தூரத்தில் தொங்கும் பழத்துக்கு நிகரானது.   இவ்வாறு  செய்வதன் மூலம் சாதாரண வழக்குகளிலும்  அதிக அளவில் நீதிமன்ற நேரம் செலவிடுவதைத் தவிர்க்க முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும் எனப் பலரும் கூறி வரும் வேளையில் இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் பல துறைகளில் பயன்படுத்தும் அளவுக்கு  வளரவில்லை எனவே கூறலாம்.  எனவே இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் சட்டத்துறை மட்டுமின்றி பல துறைகளிலும் இதன் பயன்பாடு அதிகரிக்கும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.