குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்ல பல கோவில்கள் மற்றும் மசூதிகளிலும் கூட அனுமதி இல்லை என்றும், சபரிமலையை மட்டும் அதற்கு விலக்காக கருத முடியாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

கடந்த 1990ம் ஆண்டு சபரிமலை கோவிலுக்குள் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்ல தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், 1991ம் ஆண்டு உத்தரவிட்ட கேரள உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீண்ட இடைவேளிக்கு பின்னர் 2006ம் ஆண்டு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2008ம் ஆண்டு இவ்வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. 2016ம் ஆண்டு இவ்வழக்கில் கேரளாவில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு, மத நம்பிக்கைகளை பாதுகாக்க தாங்கள் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், இடதுசார்பின்மை அரசு பெண்களை அனுமதிக்க ஒத்துழைப்பு தருவதாக உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வாதத்தை முன்வைத்தது.

இதனை தொடர்ந்து 2017ம் ஆண்டு மேலும் பல கேள்விகளோடு 5 பேர் கொண்ட அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்கள் செல்ல அனுமதி அளிப்பதாக அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து 2018ம் ஆண்டு 65 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இச்சீராய்வு மனுக்கள் மீது, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா, ரோஹின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் இருவர் பழைய தீர்ப்பு தொடரும் என்றும், மூவர் பெண்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை தெரிவித்ததால், வழக்கை 7 அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டும் இல்லை, வேறு பல கோவில்களிலும், மசூதிகளிலும் கூட உள்ளது. சபரிமலை போன்ற முக்கிய மத வழிபாட்டு இடங்களுக்கான கொள்கைகளை உச்சநீதிமன்றம் உருவாக்கிட வேண்டும். தற்போது மனுதாரர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதன் மூலம், மதம் மற்றும் நம்பிக்கை மீதான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றொரு மதத்தவர் நம்ப வேண்டும் என்பது அவசியமில்லை” என்று தெரிவித்தார்.

தீர்ப்புக்கு பின்னர் சபரிமலையில் என்ன மாதிரியான நிலை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து நீதிபதிகளும் மௌனம் காத்ததால், பெண்களை அனுமதிப்பது சரியா ? அல்லது, பழைய மரபு படி நடைமுறைகள் தொடருமா ? என்பது குழப்பமாகவே நீட்டித்து வருகிறது.