லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ள தவுலத்பூர் கிராமத்தில் 2008ம் ஆண்டில் ஸ்ரீமதி ஐஸ்வர்யா பச்சன் கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் அமிதாப் பச்சன், இவரது மனைவி ஜெயா, மகன் அபிஷேக், மருமகன் ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழா நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், தற்போது வரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்காத நிலை உள்ளது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி நிதியை திரட்டி அமிதாப் பச்சன் கல்லூரி கட்ட திட்டமிட்ட பிளாட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் புதிய கல்லூரியை கட்டியுள்ளனர்.
ரூ. 60 லட்சம் செலவில் 12 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதற்கான 10 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை ஒரு ஆசிரியரின் தந்தையும், அவரது சகோதரரும் தானமாக வழங்கியுள்ளனர். இந்த திட்டத்தை அந்த கிராமத்தின் ஆசிரியரான 40 வயதாகும் சத்தியவான் சுக்லா செயல்படுத்தியுள்ளார். இருபாலரும் படிக்க கூடிய இந்த கல்லூரி பைஸாபாத் ஆர்எம்எல் அவாத் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. முதலில் பிஏ மற்றும் பி.எஸ்சி பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
எம்.பி ஜெயப்பிரதா நடத்திய நிஷ்தா அறக்கட்டளை உதவியுடன் பள்ளி கட்டும் திட்டத்தை அமிதாபச்சன் தொடங்கினார். இந்த அறக்கட்டளை செயலழிந்தவுடன் அமித் சிங் தலைமையிலான அமிதாப் பச்சன் சேவா சன்ஸ்தன் மூலம் 2012ம் ஆண்டில் பெண்கள் கல்லூரியாக கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், இறுதியில் ரூ. 5 லட்சத்தை மட்டும் முதல் மற்றும் இறுதி தவணையாக அமிதாப் பச்சன் கிராம மக்களிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.