புதுடெல்லி:

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி, இந்தியாவில் குடியேறிய 31 ஆயிரம் இந்துக்கள், குடியுரிமை சட்ட திருத்தத்தில் பயன்பெறுவார்கள் என கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய புலனாய்வு அமைப்பான ஐபி தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த 8-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, கூட்டு நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராகி ஐபி இயக்குனர் ராஜீவ் ஜெயின் கூறியதாவது:


ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களாக இருந்த 31 ஆயிரம் இந்துக்கள் இந்தியாவில் குடியேற நீண்ட கால விசா வழங்கப்பட்டது.

தாங்கள் வாழ்ந்த நாட்டில் மத துன்புறுத்தலுக்கு உள்ளானதாக காரணம் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே, அவர்களுக்கு நீண்டகால விசா வழங்கப்பட்டது. இதில் நிரந்தர குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே இந்த சட்டதிருத்தம் மூலம் உடனடியாக பயன்பெறுவர்.

அந்த வகையில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடனே நிரந்தர குடியுரிமை பெறுவர்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.