பாட்னா:

பீகாரில் அனல்மின் நிலையத்தில் பணியில் இருந்த காண்ஸ்டபிள் ஒருவர் சரமாரியாக சக வீரர்களை நோக்கி சுட்டதில் 3  பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் அனல் மின் நிலையம் உள்ளது. இது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஷிப்டுகளாக காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் ஷிப்ட் மாறும் நேரத்தில், பல்வீர் சிங் என்ற காண்ஸ்டபிள், திடீரென தனது துப்பாக்கியால் சக வீரர்கள் நான்கு பேர் மீது சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

இந்த திடீர் தாக்குதலால் இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு உதவி ஆய்வாளர் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒரு தலைமைக் காவலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இதைகண்ட மற்ற காவலர்கள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், ஷிப்டு மாற்றுவது குறித்து எழுந்த தகராறு காரணமாக ஆத்திரத்தில் அவர் இப்படி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.