அபுதாபி: அமீரக நாட்டில் நடைபெற்றுவரும் டி-10 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியொன்றில், 12 பந்துகளில் அரைசதம் அடித்து, முந்தைய சாதனையை சமன் செய்துள்ளார் விண்டீஸை சேர்ந்த அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல்.
அமீரக தலைநகர் அபுதாபியில் நடைபெற்றுவரும் டி-10 கிரிக்கெட் தொடரில், அபுதாபி அணிக்காக ஆடுகிறார் கெய்ல்.
மராத்தா அணி vs அபுதாபி அணிக்கு இடையில் லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த மராத்தா அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 97 ரன்களை எடுத்தது.
10 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கினர் அபுதாபி அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் பால் ஸ்டெர்லிங்.
தனது இன்னிங்ஸில் புயலென ருத்ரதாண்டவம் ஆடிய கெய்ல், 12 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர், மொத்தம் 22 பந்துகளை மட்டும் சந்தித்து 84 ரன்களை வெளுத்துவிட்டார். இதில், 78 ரன்கள் சிக்ஸர்கள் & பவுண்டரிகள் மூலம் கிடைத்தன.
இதனால், அபுதாபி அணி, 5.3 ஓவர்களிலேயே, 1 விக்கெட் மட்டுமே இழந்து 100 ரன்களை எட்டி வென்றது.
டி-10 கிரிக்கெட்டில், கடந்த 2018ம் ஆண்டில் முகமது ஷாஜத் செய்த 12 பந்துகளில் அரைசதம் என்ற சாதனையை, சமன் செய்துள்ளார் கிறிஸ் கெய்ல்.