பெங்களூரு: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சைப் பலனின்றி இன்று (டிசம்பர் 15) உயிரிழந் தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் பாமக தலைவர் ராமதாஸ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்கடன் ராணுவ முகாமுக்கு கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் வருகை தந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 ராணுவப் பணியாளர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக விபத்து ஏற்பட்ட அன்றே அறிவிக்கப்பட்டது. குரூப் கேப்டன் வருண் சிங் 80 விழுக்காடு தீக்காயத்துடன் மீட்கப்பட்டு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இநத் நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் காரணமாக அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் மரணமடைந்துள்ள சோகம் ஏற்பட்டுள்ளது.
குரூப் கேப்டன் வருண் சிங்கும் மரணத்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடிவெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “குரூப் கேப்டன் வருண் சிங் இந்திய தேசியத்திற்குப் பல வீரமிக்கச் சேவைகளை ஆற்றியுள்ளார். அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவை என்றும் மறக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவரும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரான, குரூப் கேப்டன் வருண் சிங்கும் இப்போது உயிருடன் இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது வீரமும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும். மேலும் அவர் நம் மனத்தில் என்றும் வாழ்வார்” என தெரிவித்து உள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், ‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 80% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமானப்படை குரூப்கேப்டன் வருண்சிங் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என கூறியுள்ளார்.