பாட்னா :
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று 32 வயதில் அடி எடுத்து வைத்தார்.
பாட்னாவில் உள்ள தனது தாயார் ராப்ரி தேவி இல்லத்தில் ‘கேக்’ வெட்டி தனது பிறந்த நாளை அவர் எளிமையாக கொண்டாடினார்.
அவருக்கு லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். “நீண்ட ஆயுளுடன், வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்” என சிராக் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
தேஜஸ்வியும், சிராக்கும் குடும்ப நண்பர்கள் ஆவர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் தேஜஸ்வி தந்தை லாலுவும், சிராக் தந்தை ராம்விலாஸ் பஸ்வானும் இணைந்து செயல் பட்டவர்கள்.
அதுபோல் தேஜஸ்வியும் சிராக்கும் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கிரிக்கெட் பிரியர்களாக இருந்தவர்கள்.
தேஜஸ்வியை விட சிராக் 6 வயது மூத்தவர் என்பதால் ‘’ அண்ணன் ‘’ என்றே சிராக்கை தேஜஸ்வி அழைப்பார்.
அண்மையில் ராம்விலாஸ் பஸ்வான், இறந்தபோது முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் மரியாதை நிமித்தமாக துக்கம் விசாரிக்கக்கூட செல்லவில்லை. ஆனால் பஸ்வான் வீட்டுக்கு நேரில் சென்ற தேஜஸ்வி, பஸ்வான் மனைவி காலை தொட்டு வணங்கினார்.
நடந்து முடிந்த தேர்தலில் தேஜஸ்வி போட்டியிட்ட ராகோபூர் தொகுதியில் உள்ள ’ராஜ்புத்’ சமூகத்தினர் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது வழக்கம்.
இந்த தொகுதியில் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவரை தனது கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தி இருந்தார், சிராக்.
“தனது கட்சி வேட்பாளர் பா.ஜ.க.வுக்கு செல்லும் ராஜ்புத் சமூக வாக்குகளை பிரிப்பார். இதனால் தேஜஸ்வி எளிதில் ஜெயிப்பார்” என்பது சிராக்கின் கணக்கு. இப்போது தேஜஸ்விக்கு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளதால், அவருடன் சிராக் கை கோர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
– பா. பாரதி