பாட்னா

பீகார் முதல்வராக நிதிஷ்குமாரை பாஜக அறிவித்ததற்கு லோக ஜன்சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் தற்போது ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இணைந்து போட்டியிடுகிறது.   இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.  அவருடைய கட்சி குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்றாலும் அவரே முதல்வர் என பாஜக தெரிவித்துள்ளது.

இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள லோக் ஜன்சக்தி கூட்டணியில் இருந்து விலகித் தனித்து  போட்டி இட்டு வருகிறது.  மத்திய அமைச்சரவையில் இக்கட்சி இடம் பெற்றுள்ளதால் பாஜகவுடன் நேரடி போட்டியைத் தவிர்த்து வருவதாகச் சொல்லப்படுகிறது.  இந்நிலையில் நிதிஷ்குமாரை முதல்வராக பாஜக அறிவித்ததை லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் எதிர்த்துள்ளார்.

அவர் இது குறித்து, “பாஜகவினர் வெளிப்படையாக நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளில் அவர்களுக்குத் தேவையான உறுப்பினர்கள் கிடைக்கவில்லை எனில் எனது ஆதரவை கேட்க மாட்டோம் என வெளிப்படையாக அவர்கள் கூறுவார்களா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசியல் ஆர்வலர்கள் சிராக் பாஸ்வானின் இந்த கேள்வியால் பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் சுவாரசியம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.