அமெரிக்க போர் கப்பலை விரட்டியடித்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

தென் சீன கடலின் ஸ்கார்பரோ ஷோல் நீர்வழிப்பாதை அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறியுள்ளது.

புருனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த நீர்வழிப்பாதைக்கு உரிமை கொண்டாடும் நிலையில் சீனாவோ மொத்த தென் சீனக் கடலையும் உரிமை கோருகிறது.

2016 ஆம் ஆண்டில், சர்வதேச நடுவர் தீர்ப்பாயம், பெய்ஜிங்கின் வரலாற்று வரைபடங்களின் அடிப்படையில் அதன் கூற்றுக்களுக்கு சர்வதேச சட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், சீனா அந்த முடிவை அங்கீகரிக்கவில்லை.

சரக்குப் போக்குவரத்துக்கு மிகவும் ஏற்ற நீர் வழிப்பாதையாக உள்ள இந்த வழித்தடத்தில் இரு தினங்களுக்கு முன் பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பலை சீன கப்பல்கள் வழிமறித்ததாகவும், இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது மட்டுமன்றி சட்டவிரோத செயல் என்றும் பிலிப்பைன்ஸ் கூறியது.

இந்நிலையில் அமெரிக்க கப்பற்படையின் யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் என்ற நாசகார கப்பல் இன்று இந்தப் பகுதிக்கு வந்ததாகவும் அந்தக் கப்பலை சீன ராணுவம் விரட்டிவிட்டதாகவும் சீன ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

“சீன அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல்” அமெரிக்க போர் கப்பல் தென் சீன கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறிய சீன இராணுவத்தின் தெற்கு தியேட்டர் கமாண்ட் இது, சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறிய செயல் என்று கூறியுள்ளது.

அதேவேளையில், சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டே இந்த நீர்வழிப்பாதையில் யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் கப்பல் இயக்கப்பட்டதாக அமெரிக்க கப்பற்படை கூறியுள்ளது.