காஷ்மீரில் முதல் முறையாக தீவிரவாதிகளின் பதுங்கு தளங்களில் சந்தேகத்துக்கிடமான பொருட்களுடன் சீனக்கொடிகளும் கிடைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 17-ஆம் தேதி பாரமுல்லா பகுதியில் 700-க்கும் மேற்பட்ட வீடுகளில் நடந்த 12 மணிநேர வேட்டையில், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 44 பேர் கைது செய்யப்பட்டதாக இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஶ்ரீநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள், பெட்ரோல் குண்டுகள், சீன மற்றும் பாகிஸ்தான் கொடிகள். லஷ்கர் -இ-தொய்பா மற்றும் ஜெய்சி முகமது இயக்கங்களின் லெட்டர் பேடுகள் அங்கீகரிக்கபடாத செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த தேடுதல் வேட்டையை இராணுவமும் போலீசும் இணைந்து நடத்தியதாகவும், சந்தேகத்துகுரிய இடங்களாகக் கருதப்படும் குவாசி ஹமாம், தவீத் குஞ்ச், ஜாமியா மற்றும் மொஹல்லாஸ் உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.