மற்ற நாடுகளைப் போலவே சீனாவும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் முனைப்புடன் இருப்பதை அனைவரும் அறிவர். தற்போது, சீனாவில் திறனுள்ள ஐந்தாவது தடுப்பு மருந்து மனித சோதனைக்கு தயாராகியுள்ளதாக கடந்த வெள்ளியன்று சுகாதாரத் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிராக மருந்தைக் கண்டறிவதில் அதனதன் வழியில் ஓடிக் கொண்டுள்ள இந்த வேளையில் சீனாவும் தனது முனைப்பை காட்டியுள்ளது. ஐந்து கட்டங்களைக் கொண்ட இரண்டு பெரிய சோதனைகளில், இதுவரை 2,575 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர் என்றும், இதுவரை பாதகமான விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் திட்டமிட்டப்படி நடக்குமானால், இரண்டாம் கட்ட சோதனை இந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மேலும் தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றும், பரிசோதனைகளுக்கும், மனித சோதனைகளுக்கும் உட்படுத்தும் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, நான்கு சாத்தியமான திறனுள்ள தடுப்பு மருந்துகள் மனித சோதனையில் இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. மருந்து பயன்படுத்த ஒப்புதல் பெற தேவையான மூன்று கட்ட பரிசோதனைகள் முழுமையடைய எவ்வளவு காலம் தேவைப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 300,000-க்கும் அதிகமான உயிர்பலியுடன், சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் தடுப்பு மருந்தை உருவாக்க உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனால், கொரோனா பரவலை ஏற்கனவே கட்டுபடுத்தியுள்ள சீனாவில், அதன் வெற்றியே இறுதிக் கட்ட பரிசோதனையில் ஒரு தடைக்கல்லாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஏனெனில், இறுதிகட்ட சோதனையில் ஏராளமான எண்ணிக்கையில் தன்னார்வலர் நோயாளிகள் தேவைப்படுவார்கள். மேலும், பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஒப்பீட்டு குழுவிற்கு ஒரு ஒத்த திறனில்லா தடுப்பு மருந்து கொடுக்கப்படவேண்டும். ஆனால், வைரஸ் பரவல் ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்ட சீனாவில் இதன் சாத்தியங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பரிசோதிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் ஒன்றை உருவாக்கிய பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சினோவாக் பயோடெக், சீனாவில் போதுமான அளவு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாததால், தனது இறுதிக் கட்ட சோதனைகளை வெளிநாட்டில் மேற்கொள்ளப் போவதாக AFP இடம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு திறனுள்ள, பயனுள்ள தடுப்பூசியை உருவாக்க குறைந்தபட்சம் 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என்றும், இன்னும் நீண்ட காலமும் ஆகலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். எப்படியோ, ஒரு தடுப்பு மருந்து உருவான நற்செய்தி விரைவாக வரட்டும்!
தமிழில்: லயா