சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 50 சதவீத வரியை விதிக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார், இதனால் சீனா மீதான அமெரிக்க வரிகள் 104 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 34% பதிலடி வரிகளை திரும்பப் பெற சீனாவுக்கு டிரம்ப் 24 மணி நேர அவகாசம் அளித்தார். இல்லையெனில், சீனப் பொருட்களுக்கு மொத்தம் 104 சதவீத வரி விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

அமெரிக்கா காலக்கெடு விதித்த போதிலும் சீனா விட்டுக்கொடுக்காததால், கூடுதல் வரிகளை விதிப்பது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

திருத்தப்பட்ட கட்டணங்கள் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அறிக்கை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் அறிவிப்பைத் தொடர்ந்து, புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த அளவை எட்டியது. அதிகரித்து வரும் சீன-அமெரிக்க வர்த்தக பதட்டங்கள் மற்றும் சீனா மீதான அமெரிக்காவின் 104% வரி உயர்வு குறித்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான யுவானின் மதிப்பு 1 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து 7.4288 ஆக இருந்தது. வர்த்தகத்தின் முடிவில் இது 7.3390 ஆக நிலைபெற்றது.

இதற்கிடையில், டிரம்ப் வரிகளை விதித்துள்ள பிற நாடுகளுடனும் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தப் போரால் உலக நாடுகள் பாதிக்கப்படும் : சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் வோங் கவலை