பீஜிங்:,

கைலாஷ், மானசரோவர் செல்லும் யாத்ரிகர்கள் பயன்படுத்தி வரும் நாதுலா கணவாயை மூடி நடவடிக்கை எடுத்துள்ளது சீன ராணுவம்.

இந்திய ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்ததால்தான்  நாதுலா கணவாய் மூடப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது.

சிக்கிம் பகுதியில் சீன ராணுவம் எல்லை தாண்டி வந்து, இந்திய ராணுவத்தினர் பதுங்கு குழிகளை அழித்ததாக  இந்திய ராணுவ தரப்பில் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய யாத்ரீகர்கள் செல்லும் நாதுலா கணவாய் பகுதியை சீன ராணுவம் மூடி உள்ளது.

இதன் காரணமாக இந்திய யாத்திரிகர்கள் கைலாஷ் யாத்திரை செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

சிக்கிமில் எல்லை தாண்டிய இந்திய ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். எல்லை தாண்டி சீனாவுக்குள் வந்த இந்திய வீரர்கள், டோங்லாங் பகுதியில் நடந்து வரும் சாலை பணியை தடுத்து நிறுத்தியுள்ளது.

இதனாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நாதுலா கணவாய் மூடப்பட்டுள்ளது. கைலாஷ் மற்றும் மான்சரோவர் யாத்திரையும் அனுமதிக்கப்படவில்லை.

அவ்வாறு அவர் கூறினார்.

எல்லை பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ எல்லை தொடர்பான ஒப்பந்தங்களை இந்தியா மதிக்க வேண்டும் என்று  சீன பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.

 

சிக்கிமை ஒட்டி எல்லை வரையறுக்கப்படாத பகுதியில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 நாட்களாக சீன ராணுவத்தினர் அங்கு அத்துமீறுவதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சீன ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்தபோது, இந்தியா தரப்பில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அவர்கள் தொடர்ந்து முன்னேறியதால் லேசான கைக்கலப்புக்குப் பின் அவர்களை இந்திய ராணுவத்தினர் திருப்பி அனுப்பினர்.

இந்த மோதல்களை அடுத்து இந்தியா – சீனா இடையேயான நாதுலா கணவாயை மூடியுள்ள சீனா, பாதுகாப்புக் காரணங்களுக்காக கணவாய் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த கணவாய் மூடப்பட்டதால் அந்த வழியாக யாத்திரைக்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.