டெல்லி:

சீன நாட்டின் மொபைல் ஆப்கள் (செயலி) பாதுகாப்பற்றது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், டிக்டாக் உள்பட சீன நாட்டைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது.

இதையடுத்து கூகுள் பிளே ஸ்டோர், ஆப்ளிஸ் ஸ்டோர்களில் இருந்து அந்த செயலிகள் நீக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்க செயல்படுகிறோம், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படவில்லை என்று டிக்டாக் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

சீனாவின் பிரபலமான மொபைல் செயலி(App) டிக்டாக். 14 இந்திய மொழிகளில் வெளியாகி உள்ள இந்த செயலியை,  இந்தியாவில் சுமார் 12 கோடி பேர் உபயோகப்படுத்துவதாக கூறப்படுகிறது.   இதுபோன்ற செயலிகள் மூலம் நமது நடவடிக்கைகள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து,  டிக் டாக் உள்பட 59 செயலிகளை நீக்க மத்தியஅரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், டிக்டாக் செயலி, தனது விளக்கத்தை தெரிவித்து உள்ளது.  டிக்டாக் இந்தியா நிறுவனம் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய அரசின் உத்தரவுக்கு எங்கள் நிறுவனம் கீழ்படியும். அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்க செயல்படுவதாகவும்,  இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அரசுடன் சந்திப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டேட்டா ரகசியம், பாதுகாப்பு விஷயங்கள் உள்ளிட்டவற்றில் டிக்டாக் தொடர்ந்து ரகசியத்தை காக்கும். எங்களது பயனாளரின் எந்த ஒரு விவரத்தையும் இந்தியா அல்லது சீன அரசு உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு பகிர்ந்துகொண்டது கிடையாது. மத்தியஅரசின் உத்தரவுக்கு  இணங்குவதற்கான செயல்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். என்று டிக்டாக்கின் இந்திய தலைவர் நிகில் காந்தி கூறி உள்ளார்.

மேலும், இந்திய சட்டத்தின் கீழ் அனைத்து தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கும் தொடர்ந்து இணங்குவதாகவும், கலைஞர்கள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன் வழியாக மக்களை இணைத்து வருகிறார்கள். இதில் பலரும் முதல் முறையாக இணையத்தை பயன்படுத்துபவர்கள். இவ்வாறு டிக் டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதன் பயனர்களின் எந்த தகவலையும் சீன அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசாங்கத்துடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், “மேலும், எதிர்காலத்தில் எங்களிம் கோரப்பட்டாலும்  நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். பயனர் தனியுரிமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்,” என்றும் தெரிவித்து உள்ளார்.