வுகான்

கொரோனா தொற்று தொடங்கிய வுகான் நகரில் இன்று 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

கடந்த வருட இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  அதன் பிறகு அது அந்நகரில் 50,334 பேருக்குப் பரவியது.   பிறகு சீனாவில் பரவி தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது.    இந்த நோய்த் தொற்றால் இதுவரை 41.31 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டு 2.81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது.  அமெரிக்காவில் இதுவரை 13.48 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டு சுமார் 80000 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின்,இத்தாலி, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளில் பாதிப்பு அதிக அளவில் உள்ளன.

சீனாவில் கொரோனா பாதிப்பு அடியோடு குறைந்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.  மேலும் வுகான் நகரில் அனைவரும் குணமடைந்து ஒருவருக்குக் கூட பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. சீனாவில் அறிவிக்கப்பட்டிருந்த 76 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்து இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் வுகான் நகரில் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 37 நாட்களுக்கு பிறகு வுகான் நகரில் இன்று ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இது சீனாவை மட்டுமின்றி அனைத்து நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  கொரொனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் 5 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.