பெய்ஜிங்:
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்தி வந்த வட கொரியாவுக்கும், அதைத் தீவிரமாக எதிர்த்து வந்த அமெரிக்காவுக்கும் போர் மூளுமோ என்று அச்சப்படும் அளவுக்கு இரு நாடுகளுக்கிடையே உறவு சீர்கெட்டிருந்தது. இந்த நிலையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் நிலைமை மாறியிருக்கிறது. இரு கொரியாக்களுக்கு இடையே மட்டுமின்றி, வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது.
முக்கிய திருப்பமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். சந்திப்பு, இன்னும் 4 வாரங்களில் நடைபெற உள்ளது.
இந்த சூழலி, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யி, இந்த வாரத்தில் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்து உள்ளது. இந்த பயணத்தின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. கடந்த 2007ம் வருடத்துக்குப் பிறகு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வடகொரியா செல்வது இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.