பீஜிங்

னது பொருளாதாரப் பாதை பணிக்கு ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகளால் பாதிப்பு உண்டாகும் என்பதால் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா தயக்கம் காட்டி வருகிறது

புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.   அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநா பாதுகாப்புக் குழுவை இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.   இந்த கோரிக்கை குறித்து ஐநா முடிவு செய்ய இந்த மாதம் 13 ஆம் தேதி கடைசி தினம் ஆகும்.

ஏற்கனவே மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா மூன்று முறை மறுப்பு தெரிவித்துள்ளது.   இதனால் அந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.   தற்போது பல உலக நாடுகள் இந்த முயற்சிக்கு ஆதரவாக உள்ளன.    இருப்பினும் சீனா தனது முடிவை இது வரை தெரிவிக்காமல் உள்ளது.

இது குறித்து ஆராய சீனாவின் வெளிநாட்டுத் துறை துணை அமைச்சர் காங் சுவன்யு கடந்த 5 மற்றும் 6 ஆம்  தேதிகளில் பாகிஸ்தான் சென்றார்.   அப்போது அவர் சீனா அமைக்க உள்ள பொருளாதார பாதை குறித்தும் பாகிஸ்தானுடன் விவாதித்துள்ளார்.   பொருளாதார பாதை சீனா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அமைக்கப்பட உள்ளது.

இந்த சாலை அமைப்பு பணியில் சுமார் 10000 சீனர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பாதை செல்லும் வழியில் பாலகோட் அமைந்துள்ளது.   இந்த பகுதியில் சமீபத்தில் நடந்த இந்திய விமானபடை தாக்குதலில் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.   இந்த இயக்கத்தின் பல தீவிரவாதிகள் பாலகோட்டில் இன்னும் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மசூத் அசாருக்கு எதிராக சீனா செயல்பட்டால் இந்த சாலைப் பணிகள் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தால் பாதிப்பு அடையும் என சீனா கருதுவதாக சொல்லப்படுகிறது.  ஆகவே மசூத் அசாருக்கு எதிரான ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க சீனா தயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.