பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படும் மிகப்பெரிய அணைத் திட்டம் தொடர்பாக, அந்த நதி பாய்ந்து செல்லும் இதர நாடுகளின் நீர் தேவை தொடர்பான பிரச்சினைகள் கணக்கில் கொள்ளப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதி என்று அழைக்கப்படும் நதியானது, சீனாவில் யார்லுங் ஸாங்போ என்று பெயரில் குறிப்பிடப்படுகிறது. அந்த நதி திபெத் நாட்டில் உற்பத்தியாகிறது. பின்னர், அருணாச்சலப் பிரதேசத்தில் நுழைகிறது. அங்கே, இந்த நதிக்குப் பெயர் சியாங்.
இந்த நதியின் குறுக்கில்தான், தனது ஆக்ரமிப்பிலுள்ள திபெத் பகுதியில் மிகப்பெரிய அணை திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், பிரம்மபுத்திரா நதி நீரை நம்பியுள்ள இந்திய மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பாதிப்படையும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய கவலைகள் தெரிவிக்கப்பட்டதை அடுத்தே, சீன தூதரக செய்தித் தொடர்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த அணைத்திட்டம், அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையின் அருகே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிகப்பெரிய நீர் மின்சாரம் தயாரிப்பதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.