டில்லி
இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு எல்லைப்பகுதியில் நிலைமை சீரடைந்து வருவதாகச் சீனா அறிவித்துள்ளது.
கடந்த மாதம் இந்தியா சீனா எல்லையில் லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்தது. இதற்குப் பதிலாக இந்தியாவும் படைகளைக் குவித்தது. சீன அதிபர் தனது வீரர்கள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறியதும் இந்தியப் பிரதமர் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி அமெரிக்க அதிபர் டிர்மப் தாம் மத்தியஸ்தம் செய்யத் தயார் என அறிவித்தார்.
இதற்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்குள் பேச்சு நடத்தி முடிவுக்கு வருவதாகக் கூறி மறுத்து விட்டன. இந்நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தியும் முடிவுக்கு வரவில்லை. கடந்த சனிக்கிழமை அன்று இந்திய ராணுவ உயர் அதிகாரியான ஹரீந்தர் சிங் மற்றும் சீன ராணுவ அதிகரி லியு லின் ஆகியோர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தையும் இரு தரப்பில் இருந்து சுமார் 10 அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இந்த பேச்சு வார்த்தையில் ஒரு ஒப்பந்தம் எட்டி உள்ளதாகவும் அதன்படி சீனா தனது வீரர்களை எல்லைப்பகுதியில் இருந்து திரும்பப் பெற்று வருவதாகவும் இந்தியா அறிவித்தது. சீனாவும் இன்று இரு தரப்பும் இணைந்து ஒரு உடன்படிக்கையை எட்டி உள்ளதாகவும் அதன்படி இரு தரப்பிலும் நிலைமை சீரடைய தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது
பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இரு நாடுகளும் இது போல அதிகாரபூரவ அறிவிப்பு ஒன்றை முதல் முறையாக வெளியிட்டுள்ளன ஆயினும் சீன தரப்பில் இருந்து இந்த ஒப்பந்த விவரம் குறித்தும் இரு தரப்பிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எவ்வித விவரமும் வெளியிடவில்லை. இதைப் போல் இந்தியத் தரப்பில் இருந்தும் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.