பெய்ஜிங் :

சீனாவின் கொரோனா பற்றிய புள்ளிவிவரங்கள் நம்பகதன்மையற்றவை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டிற்கு சீன வெளியுறவுத்துறை நேற்று மிகவும் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது..

பத்திரிகையாளர்களிடையே பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் உவா சுன்யிங்.

சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் அதிவிரைவில், திடமாக, மக்கள் நலன் கருதி வெளிப்படையாக எடுக்கப்பட்ட முடிவுகள்.

சீனாவின் நடவடிக்கைகளை கொச்சைபடுத்தும் சில அரசியல்வாதிகளின் செயல் தரம் தாழ்ந்ததாக உள்ளது.

இந்த விவகாரத்தில் நீதிபதியாக இருக்கக்கூடியவர்கள் உலக சுகாதார அமைப்பே தவிர புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடும் அரசியல்வாதிகள் அல்ல.

தங்கள் மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கமுடியாத கையாலாகாத அரசியல்வாதிகள் அதை திசைதிருப்ப முயல்கின்றனர்.

நோயின் தன்மை மற்றும் தீவிரத்தை பற்றி ஆராயாமல் எந்தவொரு நோயையும் குணப்படுத்த முடியாது, சீன மருத்துவர்களின் அயராத உழைப்பால் நாங்கள் இதனை கட்டுபடுத்தியிருக்கிறோம் இனி இதுபோன்ற வீண் பேச்சுகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளவேண்டும். எங்களுக்கு இதுபோன்ற தேவையற்ற விவாதம் செய்ய நேரமில்லை என்று மிகவும் காட்டமாக கூறியிருக்கிறது சீன வெளியுறவுத்துறை.

முன்னதாக புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், சீனா சொல்வது உண்மைதானா என்பது யாருக்கும் தெரியாது, சீனா ஆரம்பம் முதலே தவறான தகவலை தெரிவிக்கிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.