அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்திலும் சுயசார்பை நோக்கி சீனா முன்னேறிவருகிறது.
கடந்த வாரம், சீனாவின் வணிக அமைச்சகம் அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த புதிய ஆவணங்களை வெளியிட்டது, ஆனால் இவற்றை மைக்ரோசாப்ட் வேர்டு அல்லது வேறு எந்த அமெரிக்க வேர்டு செயலியைப் பயன்படுத்தியும் திறக்க முடியவில்லை.
மைக்ரோசாப்டின் தொகுப்பிற்கு சமமான பிரத்தியேகமாக செயல்படும் சீனாவின் உள்நாட்டு WPS ஆஃபீஸ் கோப்பு வடிவமைப்பை அமைச்சகம் பயன்படுத்தியிருந்தது பின்னர் தெரியவந்தது.

பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட கிங்சாஃப்ட் உருவாக்கிய WPS Office வேறுபட்ட குறியீட்டு அமைப்பைப் பயன்படுத்துகிறது, இதன் மூலம் அதன் கோப்புகளை மாற்றாமல் வேர்டுடன் பொருந்தாது.
2022 ஆம் ஆண்டில், அரசுக்குச் சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம், அரசுக்குச் சொந்தமான அனைத்து நிறுவனங்களும் செயல்பாடுகள் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக 2027 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு மென்பொருளை முழுமையாக ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
வங்கிகள் முதல் விமான நிறுவனங்கள் வரை சீனாவின் முக்கிய சேவை வழங்குநர்கள் பலர் ஏற்கனவே வெளிநாட்டு அமைப்புகளிலிருந்து விலகிச் சென்றுள்ளது.
ஜூலை 2024 இல் டெக்சாஸை தளமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு நிறுவனமான CrowdStrike இன் தவறான புதுப்பிப்பு உலகளவில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் அமைப்புகளை முடக்கியபோது, ஆனால் ஒப்பீட்டளவில் சீனாவில் இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
தற்போது WPS Office சீனாவில் ஆதிக்கம் செலுத்தும் உள்நாட்டு செயலியாக மாறியுள்ளது, அதே நேரத்தில் டென்சென்ட், ஹவாய், அலிபாபா மற்றும் நெட்ஈஸ் போன்ற நிறுவனங்கள் மின்னஞ்சல், கிளவுட் மற்றும் பிற டிஜிட்டல் சேவைகளுக்கான உள்நாட்டு மாற்றுகளை உருவாக்கி வருகின்றன
இதையடுத்து, சீனாவில் இருந்து வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் படிப்படியாக வெளியேறி வருகின்றன.
அடோப் மற்றும் சிட்ரிக்ஸ் (கிளவுட் மென்பொருள்) சீனாவில் செயல்பாடுகளைக் குறைத்துள்ளன, அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் ஷாங்காயில் உள்ள அதன் AI ஆராய்ச்சி ஆய்வகத்தை மூடியுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் தரவு அபாயங்களைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு செப்டம்பரில், பைட் டான்ஸ் மற்றும் அலிபாபா உள்ளிட்ட முக்கிய சீன நிறுவனங்களுக்கு என்விடியாவின் RTX Pro 6000D chip-களின் சோதனை மற்றும் கொள்முதலை ரத்து செய்யுமாறு பெய்ஜிங்கின் சைபர் ஆணையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.