பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது..
தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில் சீனா கட்டவுள்ள இந்த அணையால் பிரம்மபுத்திரா நதி (சாங்போ நதி) பாய்ந்தோடும் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவித்த 14-ஆவது ஐந்தாண்டு திட்டம் (2021-2025) மற்றும் 2035-க்குள் சீனாவில் மேற்கொள்ள வேண் டிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, தொலைநோக்கு திட்டங்களில் பிரம்மபுத்திரா அணை திட்டம் இடம்பெற்றுள் னது.
ஏற்கெனவே பெரும் முதலீட்டில் ‘த்ரீ கார்ஜஸ்’ (மூன்று குன்றுகள்) அணையை கட்டியதோடு, திபெத்தில் ரூ.12,500 கோடி மதிப்பிலான ஜாம் நீர்மின் நிலையத் திட்டத்தையும் சீனா செயல்படுத்தியுள்ளது.
தற்போது, ஹிமாலய மலைத்தொடர் வழியாக பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே திபெத்தில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட தீர்மானித்துள்ளது.
இதுதவிர, அங்கு அமைக்கப்படும் நீர்மின் நிலையத்தில் ஆண்டுக்கு 300 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 30 கோடி மக்களுக்கு ஓராண்டுக்கான மின்சார தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நீர் மின் நிலையம் திட்டம் செயல்பட துவங்கியதும் திபெத் தன்னாட்சி பிராந்தியத்துக்கு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஹிமாலய மலைத்தொடர் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதி இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.
ஏற்கனவே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைகட்ட இந்தியா திட்டமிட்ட நிலையில் தற்போது சீனா செயல்படுத்த உள்ள இந்த திட்டத்தால் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.