பீஜிங்:
அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கான வரியை அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தினார்.
இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது 10 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்த நடவடிக்கைக்கு சீனா அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் அறிவுசார் சொத்துரிமையை திருடி சீனா போலி பொருட்கள் தயாரிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரியை உயர்த்துவது தொடர்பாக டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் மூலம் 3,000 கோடி முதல் 6,000 கோடி அமெரிக்க டாலர் வரை சீனாவுக்கு இழப்பை ஏற்படும் என கூறப்படுகிறது.
சீனா இதை எதிர்கொள்ள ஏற்கனவே தயாராகிவிட்டது. தேசத்தின் வர்த்தக நலனை பாதுகாக்க சீனாவிடம் வலு உள்ளது என்று சீனா அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 300 கோடி டாலர் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
பன்றி இறைச்சி, ஆப்பிள் மற்றும் உலோகப் பொருட்களுக்கு 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வரியை கூட்ட சீனா முடிவு செய்துள்ளது. வணிக யுத்தத்திற்கு அமெரிக்கா எங்களை தள்ளி விடக்கூடாது என சீனா குற்றம் சாட்டியுள்ளது.