டெல்லி:
லடாக் பிரச்சனை, இரு ராணுவத்தினருக்கும் இடையே மோதல், உயிரிழப்பு என பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், பிரசினையை சுமூகமாகதீர்த்துக்கொள்ளும் வகையில், இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி சீனா அழைப்பு விடுத்துள்ளது.
லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா, சீனா ரணுவ வீரர்களிடையே எழுத்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு 40க்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மன்றும் முப்படை தளபதிகள் இடையே இன்று 2வது நாளாக தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியும் உள்துறை, பாதுகாப்புத்துறைஅமைச்சர்களுடன் எல்லைப்பிரச்சினை, சீனாவின் அத்துமீறிய தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சீனாவின் தாக்குதல் இந்திய மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சீனா, இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
லடாக் எல்லை தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தை முலம் தீர்க்க இந்தியா முன்வரவேண்டும் என்றும், லடாக் எல்லையில் மேலும் மோதல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை என சீனா வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை தொடரிபாக ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று, இரு நாட்டு ராணுவங்களுக்கும் பின்வாங்கிய நிலையில், சீனா ராணுவத்தினர் அத்துமீறி இந்தியா ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், சீனா மீண்டும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
சீனாவின் இந்த அழைப்பு, பின்வாங்கியதற்கான அடையாளமா அல்லது முதுகில் குத்துவதற்கான அவகாசமா என்பது போகப்போகத்தான் தெரிய வரும்.