உலகில் திறமையானர்வர்கள் மற்றும் மாணவர்களின் முதல் தேர்வாக அமெரிக்கா பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.

அங்குள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய வாய்ப்புகளை கொடுத்தன.

ஆனால் டிரம்ப் கொண்டு வந்த புதிய கொள்கைகள் இதை மாற்றிக் கொண்டிருக்கின்றன.

H-1B விசா செலவு அதிகரித்ததாலும், குடியேற்ற வழிகள் குறைந்ததாலும் வெளிநாட்டு திறமையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதே நேரத்தில், வெளிநாட்டு மாணவர்களையும் நிபுணர்களையும் ஈர்க்கும் நோக்கில் K விசா கொண்டு வந்துள்ளது.

சீனா பொதுவாக தனது உள்நாட்டு திறமைகளையே அதிகம் நம்புகிறது.

ஆனால் சிப் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இன்னும் இடைவெளி உள்ளது.

இதையடுத்து, அக்டோபர் 1 முதல் “K விசா” என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்துகிறது.

இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறையில் சிறந்த பல்கலைக்கழக பட்டதாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாவுக்கு வேலை அழைப்புக் கடிதம் தேவையில்லை, மேலும் நீண்ட காலம் தங்க முடியும்.

தொடக்க நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு இது எளிதான வாய்ப்பைத் தருகிறது.

அமெரிக்கா ஆராய்ச்சிக்கு நிதியை குறைக்கும் நேரத்தில், சீனா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

H-1B விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த சில வாரங்களில் சீனா K விசாவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு திறமையாளர்களை வேலைக்கு எடுப்பது கடினமாக்கும் என்றும் கூறப்படுகிறது.

கிளாரிவேட் என்ற நிறுவனம் சீனாவின் 10 முன்னணி பல்கலைக்கழங்களை பட்டியலிட்டுள்ளது :

சிங்குவா பல்கலைக்கழகம், பெய்ஜிங்
பீக்கிங் பல்கலைக்கழகம், பெய்ஜிங்
ஜெஜியாங் பல்கலைக்கழகம், ஹாங்சோ
ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம், ஷாங்காய்
சீன ஹாங்காங் பல்கலைக்கழகம், ஷாட்டின், ஹாங்காங்
சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஹெஃபி
சீன அறிவியல் அகாடமி, பெய்ஜிங்
சீன மின்னணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், செங்டு
வுஹான் பல்கலைக்கழகம், வுஹான்
சிடியன் பல்கலைக்கழகம், சியான்