புதுடெல்லி: இந்தியாவின் மீது தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை கடந்த 2007 முதல் 2018ம் ஆண்டுவரை, சீனா நிகழ்த்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம், சீனா என்பது இந்தியாவிற்கு வெறும் எல்லைப்புற ஆபத்து மட்டுமல்ல; மாறாக, தொழில்நுட்ப அச்சுறுத்தலும்கூட என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள சீன ஏரோஸ்பேஸ் ஸ்டடீஸ் இன்ஸ்டிட்யூட்(சிஏஎஸ்ஐ) என்ற நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளை முடக்கும் வகையில் ஒரு முக்கிய தாக்குதல் நடைபெற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மொத்தம் 142 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள அந்நிறுவனம். அதில், கடந்த 2012 முதல் 2018ம் ஆண்டு வரையில், இந்தியா மீது பல்வேறுவிதமான சைபர் தாக்குதல்களை நடத்தியது சீனா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் நெட்வொர்க் அடிப்படையிலான கணினி மூலமாக, ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன்மூலம் முழு செயல்பாட்டு கட்டுப்பாடு கிடைத்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.