சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு இதுவரை எந்த ஒரு பலனையும் அளிக்காத நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மூன்றாண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி முதல் முறையாக இந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யா சென்றார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் உக்ரைன் சென்ற அவர் இருநாடுகளும் போரைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தினார்.

இந்த நிலையில், 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் முழுவீச்சில் துவங்கிய நிலையில் துருக்கி அரசு மேற்கொண்ட சமாதான முயற்சி தோல்வி அடைந்தது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்படுமானால் அதனை ரஷ்யா பரிசீலிக்க உள்ளதாகவும் இந்த சமாதான நடவடிக்கையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்றும் புதின் தற்போது யோசனை தெரிவித்துள்ளார்.