சிகாகோ

சீன அரசு ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்தை மறைத்ததாகச் சீன ஆர்வலரும் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியருமான டலி யங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31அன்று சீனாவின் வுகான் மாநில அரசு ஒரு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக அறிவித்தது.  அதன்பிறகு ஜனவரி மாதம் 19 வரை வுகான் அரசிடம் இருந்து இந்த வைரஸ் மனிதருக்கு மனிதர் பரவும் என்பதை அறிவிக்கவில்லை.  அந்த வைரஸ் தொற்று வுகான் மாநிலத்தைத் தாண்டி அதற்குள் சீனா முழுவதும் பரவியது.  அது தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது.

இது குறித்து சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் டங் யங் ஒரு பேட்டியில், “சீன அரசியல் அமைப்பு குறித்து முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். சீனாவில் ஒவ்வொரு பகுதி, நகரம், மற்றும் மாவட்டங்களுக்கு தனித்தனி நிர்வாகம் உள்ளது.  வுகான் நகர நிர்வாகம் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று கொரொனா வைரஸ் குறித்து அறிவித்த போது அது மனிதரிடம் இருந்து மனிதருக்குப் பரவாது என தெரிவித்தது மிகப் பெரிய தவறாகும்.   இதற்குக் காரணம் மருத்துவர்கள் முழு விவரத்தையும் தெரிவிக்காதது ஆகும்.  ஆரம்பத்தில் இருந்தே சீன அரசு கொரோனா வைரஸ் தாக்கத்தை மறைந்து வந்துள்ளது என இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

இதில் நிச்சயமாக அரசியல் உள்ளது. இதில் ஏதோ தவறு உள்ளதாகச்  சந்தேகம் எழுந்ததால் சீன அதிகாரிகள் சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்திடம் புகார் அளித்தனர்.   அத்துடன் இது குறித்து உலக மக்களுக்கு அறிவித்ததால் மற்ற நாடுகள் சோதனை முயற்சியை தொட்க்க்ன.  ஆனால் வுகான் நிர்வாகம் தொடர்ந்து இது பெரிய விவகாரமில்லை எனச் சொல்லி வந்தது.   மேலும் இருவாரங்களாக அதாவது ஜனவரி 16 வரை யாரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

வுகான் அதிகாரிகள் நகரில் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகள் குறித்த தகவலை வெளியிடாமல் யாருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவித்து வந்துள்ளனர்.  இதனால் அங்கு அதிக அளவில் நடைபெறும் கடல் உணவு வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் மறைக்கப்பட்டிருக்கலாம்.  பிறகு அதே தவற்றை அமெரிக்காவும் செய்தது.   இரு நாடுகளுமே மக்கள் நலத்தை விட வர்த்தகத்தை முக்கியமாக எண்ணியது என தோன்றுகிறது.

குறிப்பாக ஜனவரி 6 முதல் 17 வரை நடந்த கட்சியின் ஆண்டு விழா கூட்டங்கள் வுகான் நகரில் நடந்துள்ளது.  இந்த நேரத்தில் இதை அனுமதித்திருக்கக் கூடாது.  இதனால் வைரஸ் நாடெங்கும் பரவியது.  கடந்த 2003 வருடமும் இது போன்ற கூட்டங்களால் சார்ஸ் வைரஸ் வேகமாகப் பரவியது.   தேசிய தலைமை இதைத் தடுத்து நிறுத்தி டிசம்பர் 31 ஆம் தேதியே தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்க வேண்டும்.

மாறாக அவர்கள் டிசம்பர் மாதம் 31 அன்று ஒரு குழுவை அனுப்பி அவர்கள் அங்கு பல தினங்கள் தங்கி இருந்தும் எவ்வித பயனும் இல்லாமல் ஆனது.  அதன்பிறகு மீண்டும் ஜனவரி மாத இடையில் மற்றொரு குழு அனுப்பப்பட்டது.  தேசிய அரசு அனுப்பிய இரு குழுக்களுக்கும் வுகான் நிர்வாகம் சரியான தகவல்களை அளிக்கவில்லை எனத் தோன்றுகிறது.  மாநிலங்களில் இருந்து முழுத் தகவல் வராமல் தேசிய அரசு சீன அரசியல் சட்டப்படி முடிவு எடுக்க முடியாது.  அதே நேரத்தில் முடிவு எடுக்க மாநில அரசுகளுக்கு முடிவு எடுக்கும் முழு அதிகாரங்களும் கிடையாது.

இது போன்ற தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்க அதிக வாய்ப்புள்ளது.  எனவே இது எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக அமைய வாய்ப்புள்ளது. எனவே சீனா அரசு நிர்வாக முறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்து மாநிலங்களுக்கு இது போன்ற மோசமான நேரங்களில் உடனடி முடிவு எடுக்கும் அதிகாரத்தை அளிக்க வேண்டும்.   தேசிய அரசு முடிவு எடுப்பதற்குள் கொரோனா நாட்டில் வெகுவாக பரவி விட்டது.

ஜனவரி 17 ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் மியான்மர் சென்றது ஏற்கனவே தீர்மானிக்கப்ப்ட்ட்தாகும்.  இந்தியாவை விடவே சீனா மிகப் பெரிய நாடாகும். எனவே ஒரு நகரத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்காகத் தேசிய நிகழ்வுகளை மாற்ற இயலாது.   வுகான் நகர நிர்வாகம் அப்போது யாருக்கும் பாதிப்பில்லை என அறிவித்திருந்தது.  எனவே சீன அதிபர் மியான்மர் சென்று இருக்கலாம்.

இவ்வாறு வுகான் நகர நிர்வாகம் உண்மைகளை மறைத்ததில் நிச்சயமாக அரசியல் உள்ளது எனத் தோன்றுகிறது.  மேலும் தேசிய சுகாதார ஆணையம் சரியான முடிவு எடுக்க தவறி விட்டது எனவும் நான் நினைக்கிறேன்.  எனவே சுகாதார ஆணையத்தின் முடிவை அரசுக்கு அறிவித்து அரசு முழு விவரங்களை உலகுக்கு அறிவிக்கும் முன்னரே கொரொனா சீனாவுக்கு வெளியிலும் பரவி விட்டது.

சீனாவில் ஒரு வெளிப்படையான மற்றும் தெளிவான அரசியல் சூழல் தேவை என்பது தற்போது அந்நாட்டுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.  மருத்துவர்களைத் தகவல்கள் அளிக்க விடாமல் தடுப்பது எவ்வளவு பெரிய அபாயம் என்பதை அந்நாடு தற்போது உணர்ந்துள்ளது.   இந்த நோய் மக்களுக்கு மக்கள் பரவும் என்பதை மறைத்தது தவறு என்பதை யாரும் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.  இது மேலும் துயரமானது” எனத் தெரிவித்துள்ளார்.