சீனாவின் இராணுவத்தின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கன்சினோ பயோலாஜிக்ஸ் (6185.HK) நிறுவனம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பு மருந்து, இராணுவப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடைப்பெற்ற முதல் கட்ட மற்றும் மனிதர்களின் மீதான சோதனையில் சிறந்த முடிவுகளைத் தந்ததால் இன்ஹா ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸால் ஏற்படும் சுவாச நோய்க்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனித சோதனைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட சீனாவின் எட்டு தடுப்பு மருந்துகளில் Ad5-nCoV- ம் ஒன்றாகும். இது கனடாவில் மனித சோதனைக்கான ஒப்புதலையும் பெற்றுள்ளது.
சீனாவின் மத்திய இராணுவ ஆணையம் ஜூன் 25 ம் தேதி இந்த தடுப்பு மருந்தை ஒரு வருட காலத்திற்கு இராணுவத்தில் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக கேன்சினோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து கன்சினோ மற்றும் இராணுவ அறிவியல் அகாடமியின் (ஏஎம்எஸ்) ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
“Ad5-nCoV தற்போது இராணுவ பயன்பாட்டிற்கு மட்டுமே என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதன் பயன்பாட்டை ராணுவ தளவாடங்கள் சப்போர்ட் டிபார்ட்மென்ட்டின் ஒப்புதல் இல்லாமல் ஒரு பரந்த தடுப்பு மருந்தாக விரிவுப்படுத்த முடியாது” என்று கன்சினோ நிறுவனம் கூறியுள்ளது.
ராய்டருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், வணிக ரகசியங்களை மேற்கோள் காட்டி, இந்த தடுப்பு மருந்து எடுத்துக் கொள்வது இராணுவத்தினருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க கன்சினோ மறுத்துவிட்டது. இந்த மாத தொடக்கத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பணியாளர்களுக்கு வேறு இரண்டு தடுப்பு மருந்துகளை வழங்க சீனா எடுத்த முடிவைத் தொடர்ந்து இராணுவ ஒப்புதல் கிடைத்ததாக தெரிகிறது.
கேன்சினோவின் தடுப்பு மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள், உலகளவில் அரை மில்லியன் மக்களைக் கொன்ற கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டியுள்ளது. ஆனால் அதன் வணிக வெற்றியை உறுதிப்படுத்த முடியாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. தனித்தனியாக, AMS தனது இரண்டாவது பரிசோதனை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு பரிசோதிக்க இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது.
புதிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்க்கு எதிராக வணிக ரீதியான பயன்பாட்டிற்கு எந்தவொரு தடுப்பு மருந்தும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் உலகளவில் 100-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளுக்கு இடையில் சுமார் ஒரு டஜன் தடுப்பு மருந்துகள் மனித சோதனையில் ஈடுப்பட்டுள்ளன என்பது முக்கியமான கவனிக்கத்தக்க செய்தி ஆகும்.
English: Roxanne Liu and Ryan Woo
தமிழில்: லயா