டில்லி
இந்திய – சீன எல்லையில் இருநாடுகளும் தலா 3000 படை வீரர்களுக்கு மேல் குவித்துள்ளது.
சீக்கிம், பூட்டான், திபெத் மூன்று எல்லைகளும் சங்கமிக்கும் இடத்தில் எப்போதுமே பதற்றம் நிலவுவது வழக்கம். தற்போது அங்கு இந்தியா சுமார் 3000 படை வீரர்களையும், சீனா சுமார் 3000 படை வீரர்களையும் குவித்து வைத்துள்ளது.
ராணுவ ஜெனரல் ராவத் காங்க்டாக் மற்றும் காலிம்போங்க் ஆகிய இடங்களையும் சுற்றி ஆய்வு நடத்தி பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை நேரடியாக கண்டறிந்தார். மேலும் படை வீரர்களை அவ்விரு இடங்களுக்கும் அனுப்பச் சொல்லி உத்தரவிட்டதாக அதிகாரபூர்வமற்ற செய்தி ஒன்று தெரிவிக்கிறது. எல்லையில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளையும் சந்தித்து ராவத் பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
சீனா தனது பூட்டான் எல்லை ஓரம் ஒரு சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. அந்த சாலை சாதாரண வாகன பயணத்துக்கு மட்டும் இன்றி, ராணுவ டாங்குகளும் பயணிக்கும் வகையில் பலம் பொருந்தியதாக அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பூட்டான் அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சாலைப் பணிகளை சீனா தொடங்கக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பூட்டான் எல்லையில் சீன ராணுவம் சாலை அமைப்பதைத் தொடர்ந்து படைகுவிப்பு நிகழ்ந்திருக்கலாம் என ஒரு பேச்சு உலவுகிறது.