புதுடெல்லி: கொரோனா பரவலால் நாட்டில் அமல்செய்யப்பட்ட தொடர் ஊரடங்கு நிகழ்வுகளை பயன்படுத்தி, அதிகளவிலான சட்டவிரோத குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வறுமையில் வாடும் குழந்தைகள், ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில், குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098க்கு தொடர்புகொண்டு பேசியோரின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.

இதேகாலத்தில், குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 64% உயர்ந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. ஊரடங்கில், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை சாதகமாக பயன்படுத்தி, பல குழந்தை திருமண சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கோயம்புத்துாரில், கடந்த வாரம் 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட 36 வயது ஆண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மராட்டியத்தில், மைனர் சிறுமியர் மற்றும் கிராமவாசிகள் அளித்த புகார்கள் அடிப்படையில், மாநில அரசும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து 80க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை, தடுத்து நிறுத்தி உள்ளன. இதைத்தவிர, 16 குழந்தை திருமணங்கள் நடந்து முடிந்தபிறகு, அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில், மேற்கு வங்கத்தின் கிழக்கு மித்னாபூரில் 15 வயது சிறுமி அளித்த புகாரின்பேரில், தொண்டு நிறுவனம் ஒன்று, திருமணம் நடக்கும் முன்பாக விரைந்து வந்து அச்சிறுமியை மீட்டது. கர்நாடகாவில் 118; தெலுங்கானாவில் 204; ஆந்திர பிரதேசத்தில் 165 குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன.

ஜூன் இறுதிவரை 5,584 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.