பீஜிங்

சீனாவில் மகப்பேறு எண்ணிக்கை சென்ற ஆண்டை விட மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளதால் மகபேறு விதிகளில் தளர்வு கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகச் சீனா உள்ளது.   இதையொட்டி ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை என்னும் கொள்கை கடந்த 1970களில் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.  இதன் காரணமாக அங்குக் குழந்தைப் பேறு குறைந்து மக்கள் தொகையும் வெகுவாக குறைந்தது.  அதன் பிறகு 2016 ஆம் வருடம் இந்த கொள்கை சற்றே தளர்த்தப்பட்டது.

2016 ஆம் வருட கொள்கைப்படி ஒரு தம்பதியினருக்கு இரு குழந்தை என மாற்றம் கொண்டு வரப்பட்டது.  இதனால் மக்கள் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசு கருதியது.  ஆனால் மகப்பேறு எண்ணிக்கை மேலும் குறைந்து வருகிறது.  சென்ற 2020 ஆம் வருடம் மகப்பேறு எண்ணிக்கை அதற்கு முந்தைய வருடத்தை விட 1.004 கோடி குறைந்துள்ளது.  அதாவது மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது.  மகப்பேறு எண்ணிக்கை தொடர்ந்து நான்கு வருடங்களாக குறைந்து வருகிறது.

எனவே 2016 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடும்பக் கட்டுப்பாடு தளர்வுகள் மக்கள் தொகை அதிகரிக்க எந்த விதத்திலும் உதவவில்லை எனத் தெரிய வந்துள்ளது.   இவ்வாறு மகப் பேறு குறைவதற்கு முக்கிய காரணம் சீனப் பெண்கள் குழந்தை பெறுவதைத் தள்ளி வைப்பதும் இளம் தம்பதிகள் விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி மகப்பேற்றைத் தவிர்ப்பதும் ஆகும்.

அதே வேளையில் மக்கள் தொகை ஆர்வலர்கள் இந்த இரு குழந்தை கொள்கையால் மக்கள் தொகை அதிகரிக்க குறைந்தது 15 வருடங்கள் ஆகலாம் என கூறுகின்றனர்.  தற்போது முதியோர் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்து வருவதால் வரும் 2025க்குள் 30 கோடி  பேர் பணி ஓய்வு பெறலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.,   எனவே அவர்களுடைய பணிக்குத் தேவையான ஆட்கள் பற்றாக்குறை உண்டாகலாம் என்பதால் குடும்ப கட்டுப்பாடு விதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.