மும்பை: மத்திய ரயில்வேயின் தலைமை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் பூபேந்திரா வைத்யா என்பவர், ரயில்வேயின் பணம் ரூ.33 லட்சத்தை வீடியோ கேம் விளையாட்டில் செலவழித்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு, கைது நடவடிக்கைக்கும் ஆளாகியுள்ளார்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது, “வீடியோ கேம்களுக்கு அடிமையான வைத்யா, தானேவிலுள்ள வீடியோ கேம் மையத்தில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். இதை அந்த மையத்தின் ஆபரேட்டரும் உறுதிசெய்து, அவர் தங்களின் ரெகுலர் வாடிக்கையாளர் என்று கூறியுள்ளார்.
இதனையொட்டி கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கைதுசெய்யப்பட்ட வைத்யா, பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் உதவி காவல் ஆய்வாளர் நவ்னாத் ரூபவதே.
தனது மொத்த சம்பளப் பணத்தையும் கேம் விளையாடுவதற்கு பயன்படுத்தும் வைத்யா, அந்தப் பணம் தீர்ந்தவுடன், அபராதமாக வசூல் செய்யப்பட்ட ரயில்வே பணத்தையும் செலவழிக்கத் துவங்கியுள்ளார். இவருக்கு தொடக்கத்தில் எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டு, பணத்தை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இவர் கொஞ்சமும் மாறவில்லை என்பதால், தற்போது இந்த உச்சகட்ட நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.