சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருவதால், பொதுமக்களுக்கு  தடையற்ற மின்சாரம், குடிநீர் வழங்குவது குறித்து தலைமைச்செயலாளர்  சிவ்தாஸ் மீனா துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் நீர்நிலைகள் வறண்டு வருகிறது. அதன் காரணமாக,  தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் தொடங்கி மனிதர்கள்வரை தவிக்கும் நிலை  பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது.  மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் கோடை வெப்பத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில்,  குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா  தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.  சென்னை உள்பட மாநிலம் முழுவதும் தடையின்றி மின் விநியோகம் கிடைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க, புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் எத்தனை என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  இந்த  ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக மே 11ந்தேதி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.