சென்னை: தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ளும் வகையில் நாளை மறுதினம் (29ந்தேதி)  மதுரை பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தொடர்ந்து 30ந்தேதி பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா அக்டோபர் 30ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அவருக்கு அரசு சார்பில் மரியாதை செய்யும் வகையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு வருகிற 30-ந்தேதி பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து நாளை மறுநாள் (29-ந்தேதி) மாலை 6 மணியளவில் விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

மதுரையில் சனிக்கிழமை இரவு தங்கும் அவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர் பெருமக்களும் மரியாதை செலுத்துகின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அன்றே சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் பசும்பொன் கிராமம் செல்வதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.