டெல்லி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகவும், அதற்காக அவர் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
“இந்தியா கூட்டணி” தலைவர்களின் அடுத்த கூட்டம் டெல்லியில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.10) தெரிவித்தார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “2024 தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாரதிய ஜனதாவை (பாஜக) எதிர்கொள்ளும் திட்டத்தை தலைவர்கள் விவாதித்து இறுதி செய்யக்கூடிய கூட்டம் டிச.19ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக டிசம்பர் 6-ம் தேதி இந்தியா கூட்டணி கூட்டத்தை கூட்டியிருப்பதாக அக்கட்சி தெரிவித்தது. ஆனால், அன்று நடைபெற முடியாத நிலையில், தற்போது 19ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த டெல்லி ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மு.க. ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி காலை டெல்லி செல்கிறார்